• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு (LPG) கைத்தொழிலை மீளக் கட்டமைத்தல்
- இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு (LPG) கைத்தொழிலை மீளக் கட்டமைப்பது சம்பந்தமான சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வர்ததக அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு 2021 யூன் மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, நாட்டில் வாயு கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பிரதிநிதிகளினதும் உரிய அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகளினதும் துறைசார்ந்த நிபுணர்களினதும் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் போது உடன்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Litro Gas Limited கம்பனியும் LAUGFS Gas PLC கம்பனியும் ஏற்கனவே நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் விதித்துரைக்கப் பட்டுள்ளவாறு 12.5 கிலோ கிராம் வீட்டுப் பாவனை கேஸ் சிலிண்டர் ஒன்று 1,493/- ரூபா என்னும் விலையில் தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்தல்.

* கேஸ் கொள்வனவு செய்தல், ஏற்றி இறக்குதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பன இரண்டு நிறுவனங்களினாலும் கூட்டாக மேற்கொள்தல் அதன் பொருட்டு அம்பாந்தோட்டை கேஸ் முனையத்தைப் பயன்படுத்துதல்.

* நாட்டிற்குத் தேவையான LP கேஸ் கொள்வனவு செய்வதற்கு உரிய கேள்வி நடவடிக்கைகள் , ஏற்றி இறக்கல் மற்றும் களஞ்சியப்படுத்தும் பணிகள் என்பவற்றை முறையாக நடாத்திச் செல்வதற்கு Litro Gas Limited கம்பனி மற்றும் LAUGFS Gas PLC கம்பனி என்பவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கி உரிய துறை தொடர்பில் நிபுணத்துவ அறிவுடைய உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை நியமித்தல்.

* உபகுழுவினால் சிபாரிசு செய்யப்படும் வழிமுறையினை எதிர்வரும் ஆறு (06) மாத காலப்பகுதிக்கு நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்றத்தின் மீது பொருத்தமான தொடர் நடவடிக்கைகளை எடுத்தல்.