• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021/2022 பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்குகளை வழங்குதல்
- நாட்டில் சேதனப் பசளை பாவனையை மேம்படுத்தும் நோக்கில் இரசாயன பசளை, கிருமி நாசினி மற்றும் களைக்கொல்லி பாவனை மற்றும் இறக்குமதியை தடை செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கையினை எடுத்துள்ளது. இதற்கிணங்க 2021/2022 பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளையினை வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கும் தேவை கமத்தொழில் அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய உர செயலகத்தில் உரிமப்பத்திரம் பெற்றுள்ள 27 உள்நாட்டு சேதன பசளை உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவர்களுள் 10 பேர்களுடைய உற்பத்தியாற்றலை கவனத்திற் கொள்ளும் போது 2021/2022 பெரும்போகத்தில் 224,000 ஹெக்டாயருக்குத் தேவையான சேதனப் பசளையை உள்ளூரில் பெற்றுக் கொள்வதற்கும் மேலும் 100,000 ஹெக்டாயருக்குத் தேவையான சேதனப் பசளையை, இனங்காணப்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கியதன் பின்னர் உற்பத்தி செய்வதற்கான ஆற்றல் நிலவுகின்றது. இதற்கிணங்க பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்கு என்பவற்றை கொள்வனவு செய்வதற்கு உரியதான விசேட கொள்வனவு குழுவொன்றையும் இந்த கொள்வனவு குழுவுக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு உரிய விடயம் தொடர்பில் நிபுணத்துவ அறிவினைக் கொண்ட தொழிநுட்ப குழுவொன்றையும் நியமித்தல்.

* 2021/2022 பெரும்போகத்தில் நெற் செய்கைக்காக 500,000 ஹெக்டாயருக்குத் தேவையான சேதனப் பசளை மற்றும் இயற்கை கனியத் தேவைகள் சர்வதேச போட்டி கேள்வி நடவடிக்கை முறையினை பின்பற்றி அரசாங்கத்திற்கு சொந்தமான உரக் கம்பனிகளின் ஊடாக இறக்குமதி செய்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளுக்கு விநியோகித்தல்.

* ஏனைய பயிர்கள் சுமார் 600,000 ஹெக்டாயருக்குத் தேவையான சேதனப் பசளை இந்த பயிர்களுக்கு உரியதான ஆராய்ச்சி நிறுவனங்களின் சிபாரிசுகளுக்கு அமைவாக நாட்டில் பசளை இறக்குமதி செய்வதற்கு உரிமப்பத்திரம் கொண்டுள்ள கம்பனிகளின் ஊடாக இறக்குமதி செய்து உரிய விவசாயிகளுக்கு விநியோகித்தல்.

* உணவு சாராத அழகு தாவரங்கள், வெட்டு பூ செய்கை மற்றும் இலைத்தொகுதி பயிர் போன்ற செய்கைகளுக்காக இனங்காணப்பட்ட விசேட பசளையை இந்த பயிர்களுக்கு உரிய ஆராய்ச்சி நிறுவனங்களின் சிபாரிசுகளின் மீது இறக்குமதி உரிமப்பத்திர வழிமுறையின் கீழ் இறக்குமதி செய்து உரிய விவசாயிகளுக்கு விநியோகித்தல்.