• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெல சதுப்பு வலயத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு
- நீர்கொழும்பு களப்பும் மற்றும் சதுப்பு நிலப் பகுதியையும் கொண்ட சுமார் 6,232 ஹெக்டயார் பிரதேசத்தில் பரந்துள்ள முத்துராஜவெல சதுப்பு நிலமானது பிரதேசத்தின் சுற்றாடல் தன்மையினை நிலைபேறாகப் பாதுகாத்து நகர மக்களின் சமூக பொருளாதார நலனோம்பல்களைப் பேணுவதற்கு பெரும் பங்களிப்பினை நல்குகின்றது. இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் 1991 ஆம் ஆண்டில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு என்பன இணைந்து தயாரித்த பிரதான திட்டத்தின் மூலம் பாதுகாப்பு வலயம், முகப்பு வலயம் மற்றும் கலப்பு நகர வலயம் என மூன்று (03) பிரதான காணி பயன்பாட்டு வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த வலயத்தில் 1,285.45 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் முத்துராஜவெல சரணாலயமாகவும் மேலும் 162.1 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசமாகவும் பெயரிடப்பட்டுள்ளன. ஆயினும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற நில மீட்பு, சதுப்பு நிலத்தில் பல்வேறுபட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்தல், பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக காணிகளை சுவீகரித்தல், சட்டவிரோதமாக காணிகளை பிடித்தல், கழிவுகளை அகற்றுதல் போன்ற காரணங்களினால் இந்த சுற்றாடல் முறைமையானது அழிவுக்குள்ளாகும் அச்சுருத்தலுக்கு ஆளாகியுள்ளது. ஆதலால், இந்த சதுப்பு நில வலயத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு என்பவற்றை உறுதிப்படுத்தும் பொருட்டு பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினாலும் சுற்றாடல் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* முத்துராஜவெல சதுப்பு வலயத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு சார்பில் தற்காலத்திற்கு ஏற்றவாறு பிரதான திட்டமொன்றைத் துரிதமாக தயாரித்தல்.

* இதன் பொருட்டு உரிய நிறுவனங்களின் தலைவர்களையும் / பிரதிநிதிகளையும் கொண்ட வழிப்படுத்தல் குழுவொன்றையும் செயற்பாட்டுக் குழுவொன்றையும் நியமித்தல்.

* வழிப்படுத்தல் குழுவின் சிபாரிசின் பிரகாரம் பொருத்தமான வழிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அரசாங்க / தனியார் காணிகளை நகர அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சுவீகரித்தல்.

* சதுப்பு நிலமொன்றாக இந்த சுற்றாடல் முறைமையின் நிலைபேறான பயன்பாட்டுக்கு உரியதான பணிகளைச் செய்யும் பொறுப்பினை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு கையளித்தல்.

* பிரதான திட்டத்தின் கீழ் இனங்காணப்படும் தேசிய ஒதுக்கமொன்றாக பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களை வனவிலங்குகள், தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தேசிய ஒதுக்கமொன்றாக பிரகடனப்படுத்தல்.

* வழிப்படுத்தல் குழுவினால் தயாரிக்கப்படும் பிரதான திட்டத்தை நடைமுறைப்படுத்தி முத்துராஜவெல சதுப்பு வலயத்தை "ரம்ஷா" சதுப்பு நிலமொன்றாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுத்தல்.