• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
க.பொ.த (சாதரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சைகள் நடாத்தப்படும் காலப்பகுதியை திருத்தி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கு செலவிடும் காலத்தை குறைப்பதன் மூலம் ஆகக்குறைந்த காலப்பகுதிக்குள் முதலாவது பட்ட தகைமையை பெறுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்
- க.பொ.த (சாதரண தர) பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுதல் மற்றும் க.பொ.த (உயர் தர) வகுப்புகளை ஆரம்பித்தல் என்பவற்றுக்கு இடைப்பட்ட காலம் அத்துடன் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக நீண்டகாலம் எடுத்தல் போன்ற காரணங்களினால் மாணவர்கள் பாடசாலை கல்வியினை பூர்த்தி செய்யும் போதும் பல்கலைக்கழக கல்வியினை பூர்த்தி செய்யும் போதும் அவர்களுடைய வயது முறையே 19 - 20 வயதாகவும் 25 - 26 வயதாகவும் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சை முறைகளில் நிலவும் கட்டமைப்பு ரீதியிலான பொருத்தமற்ற தன்மை, நடைமுறையிலுள்ள தொழிநுட்ப செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நிர்வாக ரீதியிலான தாமதங்கள் காரணமாக உயர் கல்வியினை துரிதமாக பூர்த்தி செய்து தொழிற்சந்தையில் நுழைவதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையற்ற விதத்தில் காலத்தை செலவிட நேர்ந்துள்ளது. இந்த நிலைமை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் அதேபோன்று பொதுவாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பிரதிகூலமான விதத்தில் தாக்கத்தினை செலுத்துகின்றமை தெரியவந்துள்ளது. ஆதலால், எதிர்காலத்தில் இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 10 ஆம் 11 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டங்களை ஒருவருடம் 9 மாதங்களைக் கொண்ட கால எல்லையாக மீளமைத்தல்.

* க.பொ.த (சாதரண தர) பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும் க.பொ.த (உயர் தர) பரீட்சையை திசெம்பர் மாதத்திலும் நடாத்துதல், பரீட்சை ஒவ்வொன்றுக்குமான பெறுபேறுகளை 03 மாத காலத்திற்குள் வௌியிடுவதன் மூலம் முழுச் செயற்பாட்டிற்கும் தற்போது எடுக்கும் 45 மாதங்களைக் கொண்ட காலப்பகுதியை 32 மாதங்கள் வரை குறைத்தல் மற்றும் இதற்குத் தேவையான தொழிநுட்ப ஏற்பாடுகளை செய்தல்.

* உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் செயற்பாடானது முடிவுறும் வரை காத்திருக்காது Z - புள்ளியின் மீது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துதல்.

* மீளாய்வு செய்யும் செயற்பாட்டின் மூலம் பெறுபேறு அதிகரித்த மாணவர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு புதிய Z - வெட்டு புள்ளிகளை வழங்குவதன் மூலம் உரிய பட்டப் பாடநெறிகளை கற்பதற்கு வாய்ப்பு வழங்குதல் அத்துடன் இந்த செயற்பாட்டினை 2020 உயர் தர பரீட்சையிலிருந்து நடைமுறைப்படுத்துதல்.