• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் Cyclotron அடிப்படையிலான கதிர் இயக்க மருந்து பொருட்கள் உற்பத்தி நிலையமொன்றைத் தாபித்தல்
- கதிர் இயக்க மருந்தொன்றான Fluoro Deoxy Glucose (18F-FDG) மருந்தானது புற்றுநோயை நிர்ணயிப்பதற்காக மேற்கொள்ளப்படும் PET மற்றும் CT பரிசோதனைக்களுக்காக பயன்படுத்தப்படும். இந்த மருந்து உற்பத்திக்கென Cyclotron என்னும் விசேட உபகரணமொன்று பயன்படுத்தப்படுவதோடு, இதற்கான வசதி இலங்கையில் இல்லாமையினால், குறித்த கதிர் இயக்க மருந்து பொருளானது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த மருந்தில் காணப்படும் கதிர் இயக்க தேய்மானத் தன்மை காரணமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போது மருந்தின் அளவிலிருந்து சுமார் 97 சதவீதம் இல்லாமற் போகின்றதோடு, மீதி அளவில் இருந்து 10 நோயாளிகளுக்கு மாத்திரம் சிகிச்சையளிக்கும் சாத்தியம் நிலவுகின்றது. இதன் காரணமாக வருடாந்தம் சுமார் 30,000 நோயாளிகளை உரிய பரிசோதனைக்கு உட்படுத்தும் தேவை நிலவுகின்ற போதிலும் குறித்த பரிசோதனைக்கு சுமார் 1,600 நோயாளிகளை மட்டுமே உட்படுத்த முடியுமாகவுள்ளது. இந்த இறக்குமதி செய்யப்படும் மருந்தினைப் பயன்படுத்தி நோயாளி ஒருவரை பரிசோதனை செய்வதற்கு அரசாங்கத்தி்றகு சுமார் 54,000 ரூபா செலவாவதோடு, உள்நாட்டில் இந்த மருந்தானது உற்பத்தி செய்யப்பட்டால் குறித்த செலவினை 14,000 ரூபா வரை குறைத்துக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த நிலமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கை அணுசக்தி சபை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் Fluoro Deoxy Glucose மருந்து உற்பத்தி செய்யும் நிலையமொன்றை வேரஹெரவில் அமைந்துள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலை மனையிடத்தில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.