• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண, மில்லாவ பிரதேசத்தில் ஔடத வலயமொன்றைத் தாபித்தல்
- புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக அரசாங்க மருந்துப் பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் அதன் மருந்துகளை கூடுதலாக உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திறமுறை ரீதியிலான வழிகளை பின்பற்றி வருகின்றது. இதற்கிணங்க, ஏற்கனவே அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஆரபொக்க மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் ஒயாமடுவ ஆகிய பிரதேசங்களில் ஔடத வலயங்களைத் தாபிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக மேலுமொரு ஔடத வலயத்தை களுத்துறை மாவட்டத்தின் ஹொரண, மில்லாவ பிரதேசத்தில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஔடத வலயத்தில் எலும்பு மற்றும் நரம்பு அறுவைச் சிகிச்சை உபகரணங்கள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், வில்லைகள் மற்றும் கெப்சியூல் (Capsule) மருந்து உற்பத்தி மற்றும் இதய அறுவைசிகிச்சை உபகரணங்கள். கண் வில்லைகள் என்பவற்றை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டம் இரண்டு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும். முதலாம் கட்டமானது 08 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட முதலீட்டின் மீது 2021 மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. உத்தேச ஔத வலயத்தை தாபிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான மில்லாவ பிரதேசத்தில் 64 ஏக்கரும் 83.3 பேர்ச்சர்சும் கொண்ட காணித் துண்டொன்றினை ஒதுக்கிக் கொள்வதற்காக அரசாங்க மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட வழிப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த வழிப்படுத்தல் குழுவுக்குத் தேவையான தொழினுட்ப விடயங்களை முன்வைப்பதற்காக அரசாங்க மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் தலைமையில் கருத்திட்ட முகாமைத்துவ குழுவொன்றை நியமிப்பதற்கும் ஒப்பந்தத்திற்கு முன்னைய மற்றும் ஒப்பந்தத்திற்கு பின்னரான சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் என்பவற்றை வழங்கும் பொருட்டு கருத்திட்ட முகாமையாளராக பூரண அரசுடமைக் கம்பனியொன்றான செலென்திவா முதலீட்டு கம்பனியை நியமிப்பதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் சுகாதார அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.