• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 நிதியாண்டின் இறுதியில் வரிசை அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கை
- 2018 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் வரிசை அமைச்சினால் மூலதன வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களின் பௌதிக முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கை நிதி அமைச்சினால் காலாண்டு அடிப்படையில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அளவிலான கருத்திட்டங்களுக்குரிய முன்னேற்ற அறிக்கையானது நிதி அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் இந்த அறிக்கையின் மூலம் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

* 2020 ஆம் ஆண்டினுள் மதிப்பிடப்பட்ட செலவு ஒரு பில்லியன் ரூபாவை விஞ்சும் 289 அபிவிருத்தி கருத்திட்டங்கள் 40 வரிசை அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை.

* இந்த கருத்திட்டங்களுக்கு சுமார் 710 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டதோடு, அவற்றின் நிதி முன்னேற்றம் 72 சதவீதமாகுமென.

* இந்த 289 அபிவிருத்தி கருத்திட்டங்களின் தொடர் செயற்பாடுகளுக்காக அண்ணளவாக மேலும் 2.9 ரிலியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டியுள்ளமை.

* இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளும் இடையூறுகளும் எழுந்துள்ளதோடு, கருத்திட்டங்களின் மேலதிக பதவியணி சார்பில் சுமார் 08 பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருந்த போதிலும் சில கருத்திட்டங்களுக்கு உரியதாக அங்கீகரிக்கப்பட்ட செலவு மற்றும் கால எல்லைக்குள் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறினைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாமற்போயுள்ளமை பற்றி இந்த அறிக்கையின் ஊடாக அவதானிக்கப்பட்டுள்ளமை.

* சில கருத்திட்டங்களுக்கு உரியதாக முன்னாயத்த கட்டத்திலிருந்தே சில குறைபாடுகள் அவதானிக்கப்பட்டதோடு, அரசாங்க நிறுவனங்களிடமிருந்து தேவையான அங்கீகாரங்களை பெற்றுக் கொள்ளும் போது நிகழும் தாமதங்கள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சில சந்தர்ப்பங்களில் பிரச்சினையாக மாறியுள்ளமை.

நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட \இந்த அறிக்கையிலுள்ள தகவல்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பாரிய அளவிலான மூலதன கருத்திட்டங்கள் சம்பந்தமாக எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் உரிய தரப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெறவேண்டிய ஒத்துழைப்பினை ஆகக்கூடுதலாகவும் உரிய காலப்பகுதியிலும் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக மாதாந்தம் மீளாய்வு செய்வதற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரின் தலைமையில் சிரேட்ட செயலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.