• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தெங்குத் துறையை ஒழுங்குறுத்தும் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதற்காக தெங்கு அபிவிருத்தி சட்டத்தை திருத்துதல்
– 1971 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கைத்தொழில் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளுக்கு தெங்கு செய்கை சபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் என்பன தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2005 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க கற்பகதரு நிதியச் சட்டத்தின் மூலம் கற்பகதரு நிதிய முகாமைத்துவ சபை தாபிக்கப்பட்டுள்ளது. தெங்கு துறையின் ஒழுங்குறுத்துகை அடங்கலாக சகல பணிகளையும் ஒருங்கிணைப்பதற்கு உரியதாக இந்த நிறுவனங்கள் தாபிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது இந்த நிறுவனங் களுக்கிடையில் வினைத்திறனான ஒருங்கிணைப்பு இல்லாமையினால் சேவை பெறுநர்கள் எதிர்பார்க்கும் மட்டத்தில் சேவைகளை வழங்குமுடியாமற் போயுள்ளது. இந்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் இரட்டிப்பாவதனால் சேவை பெறுநர்கள் அவர்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு பல நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளவேண்டியுள்ளமை இந்த நிறுவனங்களை நடாத்திச் செல்வதற்கு கணிசமான அளவு நிதியினை ஏற்கவேண்டியுள்ளமை போன்ற காரணங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நான்கு (04) நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து "தெங்குச் செய்கை மற்றும் அது சார்ந்த கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை" என்னும் புதிய நிறுவனமொன்றை தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1971 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத்தை திருத்தும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.