• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Grand Hyatt கருத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள முறைக்கேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்தல்
- இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் Litro Gas Lanka Ltd. ஆகிய நிறுவனங்களின் உரிமையினைக் கொண்டுள்ள Sino Lanka (Pvt.) Ltd. நிறுவனத்தின் கீழ் Grand Hyatt கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. நிர்மாணிப்பு பணிகளைப் பூர்த்தி செய்து இந்த ஹோட்டலின் வர்த்தக பணிகளை 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், 2015 ஆம் ஆண்டில் சனாதிபதி தேர்தலின் பின்னர் நியமிக்கப்பட்ட Sino Lanka (Pvt.) Ltd. நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் சபையினால் முன்னைய அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டிருந்த பெரும்பாலான உடன்படிக்கைகளை எவ்வித நியாயமான காரணமும் இன்றி இரத்துச் செய்து குறித்த வேலைகளுக்காக புதிய ஒப்பந்தக்காரர்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளது. இதன் காரணமாக சில நிறுவனங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, அண்ணளவாக 1.8 பில்லியன் ரூபா Sino Lanka (Pvt.) Ltd. நிறுவனத்தினால் நட்டஈடாக செலுத்தவேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப திட்டத்திற்கு அமைய 30 பில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் பூர்த்தி செய்யப்படவிருந்த இந்த கருத்திட்டத்தின் தற்போதைய செலவானது சுமார் 60 பில்லியன் ரூபா ஆகுமென மீள மதிப்பிடப்பட்டுள்ளது. Sino Lanka (Pvt.) Ltd. நிறுவனத்தின் கடந்தகால நிருவாகம் மேற்கொண்ட முறைக்கேடுகள் காரணமாக இந்த நிலைமை எழுந்துள்ளமை தெரியவருகின்றமையினால் இதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி ரீதியிலான நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்காக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.