• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பால் நிலைசார் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் தேசிய கொள்கையைத் தாபித்தல்
- தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகள் அதேபோன்று சுகாதார துறையின் ஆய்வுகள் போன்ற வரையறுக்கப்பட்டவை தவிர பால்நிலைசார் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் கொள்கை மற்றும் திட்டமிடல் செயற்பாட்டின் போது தடையாகவுள்ளன. முக்கியமாக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி துறையில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ள தேவைகளை இனங்காணுதல், அவற்றின் போக்குகளை அறிந்து கொள்தல் மற்றும் அவற்றுக்கு தீர்வுகளை வழங்கும் திட்டங்கள் மற்றும் திறமுறைகளை நிர்ணயிக்கும் பணிகள் போன்றவற்றுக்கு குறித்த தகவல்கள் அத்தியாவசியமானவையாகும். இதற்கிணங்க, அமைச்சுக்கள், திணைக்களங்கள், மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் அவற்றின் விடயநோக்கெல்லையின் கீழ் மேற்கொள்ளும் சகல கணக்கெடுப்புகள், ஆய்வுகள் மற்றும் கற்கைகள் மூலம் திரட்டும் தகவல்கள் பால் நிலைசார் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்டு திரட்டுவதனை கட்டாயமாக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.