• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த பிரதேசங்களில் வௌ்ளப் பெருக்கு கட்டுப்படுத்தல், சுற்றாடல் முறைமையை விருத்தி செய்தல், சதுப்பு நிலங்களை பாதுகாத்தல், சரணாலயங்களை பாதுகாத்தல் மற்றும் கால்வாய் முறைமையை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளை நோக்கமாகக் கொண்டு வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகள் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டம் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் போன்றவற்றிற்கு மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட தொகையிலிருந்து 80 சதவீதத்தை செலுத்துவதற்கும் கருத்திட்டத்தின் கீழ் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டிய வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு ஆறு (06) மாத காலத்திற்கு தற்காலிக வீட்டு வசதிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வாடகைத் தொகையினை செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கருத்திட்டத்திற்குத் தேவையான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு, கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகள் 2020 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இந்த கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்படும் குடும்பங்கள் முகங்கொடுக்கும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் நியதிச்சட்ட ரீதியிலான நட்டஈட்டுத் தொகையினை செலுத்துவதானது தவிர்க்க முடியாத காரணங்களினால் ஆறு (06) மாதத்திற்கு மேல் தாமதமாகும் சந்தர்ப்பங்களில் இந்த நட்டஈட்டுத் தொகையினை செலுத்தும் வரை மேலதிக காலப்பகுதியில் தற்காலிக வீடுகளில் குடியிருப்பதற்காக செலுத்தப்படும் வீட்டு வாடகைத் தொகையை தொடர்ந்தும் செலுத்துவதற்கும் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் வீட்டுக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் கட்டமைப்புகளுக்கும் மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள மதிப்பீட்டுத் தொகையிலிருந்து 100 சதவீதம் இந்தக் குடும்பங்களுக்கு செலுத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.