• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"மாந்தை சோல்ட் லிமிடெட்" என்னும் கம்பனியின் பெயரை "தேசிய உப்புக் கம்பனி" என மாற்றுதல் மற்றும் வடமாகாணத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான உப்பளங்கள் அனைத்தினதும் உரிமையை தேசிய உப்பு கம்பனியின் கீழ் கொண்டுவருதல்
- 1990 ஆம் ஆண்டில் உப்புக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தி இலங்கை உப்புக் கம்பனி தாபிக்கப்பட்டு வடமாகாணத்தில் அமைந்துள்ள உப்பளங்கள் தவிர ஏனைய உப்பளங்கள் இந்தக் கம்பனியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், 2001 ஆம் ஆண்டில் "மாந்தை சோல்ட் லிமிடெட்" என்னும் அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுக் கம்பனியொன்றாக தாபிக்கப்பட்டு வடமாகாணத்தில் அமைந்துள்ள உப்பளங்களின் நிருவாகம் மற்றும் கையாள்கைப் பணிகள் இந்தக் கம்பனிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 2020‑10‑06 ஆம் திகதியிடப்பட்டதும் 2196/27 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக "மாந்தை சோல்ட் லிமிடெட்" நிறுவனமும் ஆனையிரவு உப்பளமும் அரசாங்க தொழில்முயற்சிகள் இரண்டாக கைத்தொழில் அமைச்சின் விடயநோக்கெல்லைக்குள் கொண்டுவரப்பட்டன. வடமாகாணத்திலுள்ள உப்பளங்கள் ஒவ்வொன்றையும் வெவ்வேறு வரையறுக்கப்பட்ட கம்பனிகளாக நடாத்திச் செல்வதனை விட இந்த எல்லா உப்பளங்களையும் ஒரே நிருவாக கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவது நிருவாக மற்றும் பொருளாதார ரீதியில் நலன்மிக்கதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, தற்போதைய தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கைத்தொழில் அமைச்சின் கீழ் முழுவதும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றாக செயற்படும் "மாந்தை சோல்ட் லிமிடெட்" கம்பனியின் பெயரை "தேசிய உப்புக் கம்பனி" என திருத்துவதற்கும் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஆனையிரவு உப்பளத்தின் உரிமை, நிருவாகம், கையாள்கை பணிகள் என்பவற்றை "தேசிய உப்புக் கம்பனியின்" கீழ் கொண்டுவருவதற்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான உப்பளங்கள் அனைத்தினதும் உரிமையை தேசிய உப்பு கம்பனியின் கீழ் கொண்டுவருவதற்கும் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.