• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்திற்கான திருத்தங்கள்
- குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவை சட்டம் மற்றும் தண்டனைக் கோவைச் சட்டம் என்பவற்றைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் 'மேல் நீதிமன்றத்திற்கு பதிவேட்டாளர் நீதிபதிகளை' நியமிப்பதற்கும் 'மேல் நீதிமன்ற முன் வழக்கு விசாரணைகள் சம்மேளனத்தை' நடாத்துவதற்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, முன் வழக்கு விசாரணைகள் சம்மேளனத்திற்கான நடவடிக்கைமுறையினை அறிமுகப்படுத்தும் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சகல வழக்கு விசாரணைகளுக்கு முன்னரும் வழக்கு விசாரணைகளுக்குப் பின்னருமான நடவடிக்கைகள் தொடர்பில் செயலாற்றுவதற்கு நீதிமன்ற பதிவேட்டாளர் நீதிபதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் நடைமுறையிலுள்ள சில தொழினுட்ப குறைபாடுகள் காரணமாக இந்தப் பதவிக்கு இதுவரை நியமனங்கள் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணைகளுக்கு முன்னரும் வழக்கு விசாரணைகளுக்குப் பின்னருமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நீதிமன்ற பணியொன்றாகையினால் உரிய நியமனங்கள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் தற்போது சேவை புரிந்து கொண்டிருக்கும் நீதிபதிகளிலிருந்து நியமிக்க வேணடியுள்ளது. அதேபோன்று நீதித்துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'நீதிமன்ற பதிவேட்டாளர் நீதிபதி' பதவியை ' பதிவேட்டாளர் - நீதிபதி' என மாற்றுவது பொருத்தமானதெனவும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த இந்த ஏற்பாட்டினையைும் உள்ளடக்கி 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.