• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு சிறிய அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக உலோகக் கழிவுகளை வழங்குதல்
- 'கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பற்றிய அமைச்சுகளுக்கிடையிலான செயலணி' மற்றும் 'பொருளாதார புத்துயிரளிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு பற்றிய சனாதிபதி செயலணி' என்பன அதன் கூட்டங்களில் உலோகம் சார்ந்த கைத்தொழில்களில் நிலவும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடியுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு உள்நாட்டு உலோக கைத்தொழிலாளர்களுக்கு போதுமான மூலப் பொருட்களை வழங்கும் நோக்கில் உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக செப்பு, அலுமினியம், வௌ்ளி, அதிகாபன் இரும்பு, பித்தளை, வார்ப்பு இரும்பு, கழிவு அலுமினிய கோல்கள், சின்க் கோல்கள் போன்றவற்றின் ஏற்றுமதியினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை தொழினுட்ப அபிவிருத்தி சபை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இரும்பு, வார்ப்பு இரும்பு, அலுமினியம், செப்பு மற்றும் பித்தளை போன்றவற்றிற்கு உள்நாட்டு கைத்தொழிலாளர்களிடம் கடும் கேள்வி நிலவுகின்றதெனவும் சின்க், மெக்னீஸ், அதிகாபன் இரும்பு மற்றும் வௌ்ளி போன்றவற்றிற்கான கேள்வியும் அதிகரித்து வருகின்றமை உறுதியாகியுள்ளது.

உள்நாட்டுக் கைத்தொழிலை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக உலோகக் கழிவுகளுக்கு நிலவும் கேள்வி மேலும் அதிகரிக்குமென எதிர்பாரக்கப்படுகின்றது. ஆதலால், தற்போது செப்புக் கம்பி ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் மீணடும் பரிசீலனை செய்து பெறுமதி சேர்க்கக்கூடிய உற்பத்திகளுக்காக செப்புக் கம்பி ஏற்றுமதியை இடைநிறுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது.

இதற்கிணங்க, இரும்பு, செப்பு, அலுமினியம், வௌ்ளி, அதிகாபன் இரும்பு பித்தளை மற்றும் வார்ப்பு இரும்பு போன்ற உலோகக் கழிவுகளையும் அலுமினிய கோல்கள் மற்றும் சின்க் கோல்கள் உட்பட செப்புக் கம்பிகளை உள்நாட்டு கைத்தொழில்களுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கும் இவ்வாறு பயன்படுத்த முடியாத உலோகக் கழிவுகளை இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களின் சிபாரிசின் மீது மாத்திரம் ஏற்றுமதி செய்வது தொடர்பில் அங்கீகாரம் வழங்குவதற்குமாக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.