• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒரு தடவை பாவித்து அகற்றப்படுகின்ற (Single-Use) பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை முகாமித்தல்
- இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றினால் ஏற்படும் சுற்றாடல் தாக்கத்தினைக் குறைப்பதற்கு 2017 செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக மைக்ரோன் 20 அல்லது அதற்கு குறைந்த பொலித்தீன் உற்பத்தியினை தடைசெய்தல், பொலித்தீன் உணவுப் பொதியிடல் தாள் உற்பத்தியினை தடைசெய்தல் மற்றும் திறந்த வௌியில் பொலித்தீன் எரித்தலை தடைசெய்தல் போன்ற ஒழுங்குவிதிகள் அமுல்படுத்தப் பட்டுள்ளதோடு, குறித்த ஒழுங்குவிதிகள் நடைமுறையிலும் உள்ளன. உபயோகப்படுத்த முடியாதென தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்குப் பதிலாக மாற்று வழிகளை மேம்படுத்துவதற்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் முகாமைத்துவம் தொடர்புபட்ட நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் உடன்பாடு காணப்பட்டவாறு ஒரு தடவை மாத்திரம் பாவித்து அகற்றப்படுகின்ற (Single-Use) பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை குறைக்கும் நோக்கில் பின்வரும் பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகளை 2021 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து தடை செய்வதற்கும் அதற்குப் பதிலாக வேறு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துவதற்குமாக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Poly Ethylene Terephthalate (PET) மற்றும் Poly Vinyl Chloride (PVC) பொதிகளில் இரசாயனப் பொருட்கள் அல்லது கிருமி நாசினிகள் பொதியிடுதலை தடைசெய்தல் இதற்கு மாற்று வழியாக கண்ணாடி அல்லது வேறு மூலப் பொருட்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொதிகளைப் பயன்படுத்துதல்.

* மில்லி லீற்றர் 20/ கிராம் 20 இற்கு குறைந்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 'பைக்கூடுகளை' தடை செய்தல். (உணவு மற்றும் மருந்துகளுக்காக பயன்படுத்தப்படுபவை தவிர) இதற்கு மாற்று வழியாக மில்லி லீற்றர் 100/ கிராம் 100 அல்லது அதற்கு மேற்பட்ட பொதிகளைப் பயன்படுத்துதல்.

* பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையிலான காற்று அடைக்கப்பட்ட விளையாட்டு பொருட்களை தடைசெய்தல் (பலூன், பந்து வகைகள் மற்றும் நீரின்மேல் மிதக்கும் விளையாட்டுப் பொருட்கள் தவிர) இவற்றுக்கு மாற்று வழியாக சுற்றாடல் நட்புறவுமிக்கதும் சுகாதார பாதுகாப்பானதுமான மூலப் பொருட்களினால் உற்பத்தி செய்யப் பட்டவையை பயன்படுத்துதல்.

* பிளாஸ்டிக் "Cotton bud" தடை செய்தல் (சிகிச்சை சார்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தவிர) இதற்கு மாற்று வழியாக உக்கக் கூடிய மூலப் பொருட்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் "Cotton bud" பயன்படுத்துதல்.

* அனைத்து பிளாஸ்டிக் உற்பத்திகள் சார்பிலும் மீள் சழற்சி மேம்பாட்டிற்காக சருவதேச ரீதியில் சிபாரிசு செய்யப்பட்ட பிளாஸ்டிக் அறிமுகப்படுத்துவதற்காக 1-7 வரையிலான குறியீடுகளை பதிவு செய்தலைக் கட்டாயமாக்குதல்.