• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 உலகளாவிய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தை முகாமித்தல்
- புதிய COVID - 19 வைரஸ் தொற்றானது உலக பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளதோடு, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விமானப் பயண துறைகள் முற்றுமுழுதாக தடைப்பட்டுள்ளன. இந்த நோய் ஆரம்பமான சீனாவில் நோயை கட்டுப்படுத்துவதற்கும் தவிர்ப்பதற்குமாக பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நோய் பரவும் ஆபத்திலிருந்து விடுபடும் அறிகுறிகளை அந்த நாடு காட்டினாலும்கூட தற்போது COVID - 19 வைரஸானது உலகம் முழுவதும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் நாட்டில் பொதுச் சுகாதார சேவைகளை வழங்குதல், நோய் ஒழிப்புக்கு இயலுமான சகல நடவடிக்கைகளும் எடுத்தல், பாரிய அளவில் விரிவுபட்டிருந்த சேவை மற்றும் வழங்கல் என்பவற்றை மேற்கொள்தல் அதேபோன்று சுற்றுலா, ஏற்றுமதி, வௌிநாட்டு தொழில்வாய்ப்பு, தகவல் தொழினுட்பம் மற்றும் இந்த துறைகளுடன் சம்பந்தப்பட்ட சிறிய தொழில்முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினைக் கட்டுப்படுத்துதல் என்பன பொருட்டு அரசாங்கம் தலையிடுவது அத்தியாவசியமானதாகவுள்ளது.

2020 மார்ச் மாதம் 02 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டிருக்கவில்லையென்பதோடு, அச்சந்தர்ப்பத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கு மூலம் ஏற்பாடு செய்திருந்த நிதி ஏற்பாடுகள் 2019 ஆம் வருடத்திற்குரிய மருந்துப் பொருள் கொள்வனவு, பசளைக் கொள்வனவு மற்றும் பல்வேறுபட்ட நிர்மாணிப்புகளுக்கான பற்றுச்சீட்டுக்களை தீர்ப்பனவு செய்வதற்கும் அதேபோன்று 2020 பொதுத் தேர்தல் நடாத்தும் பணிகளுக்காகவும் போதுமானதாக இல்லாமையினால் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காததன் காரணமாக அரசாங்கத்திற்கு வேறு மாற்று வழயின்பால் கவனம் செலுத்த வேண்டி நேர்ந்தது.

ஆதலால், அரசியலமைப்பின் பிரகாரம் அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நோக்கங்களுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டிலான ஏற்பாடுகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, இதற்கிணங்க, பொதுத் திறைசேரியினால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* நிலுவை மருந்துப் பற்றுச்சீட்டுக்களை தீர்ப்பனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.

* COVID - 19 தடுப்பு செயற்பாடுகளுக்காக 500 மில்லியன் ரூபாவை விடுவித்தல். * பசளை கொள்வனவு பற்றுச்சீட்டுக்களை தீர்ப்பனவு செய்வதற்காக 3 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.

* சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிர்மாணிப்பு ஒப்பந்தக்காரர்களின் பற்றுச்சீட்டுக்களை தீர்ப்பனவு செய்வதற்காக 5 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.

* இரண்டு (02) வருடங்களாக செலுத்தப்படாதுள்ள சிரேட்ட பிரசைகள் வைப்புகளுக்குரிய வட்டி தொடர்பில் 46 பில்லியன் ரூபாவை ஒதுக்குதல்.

* 2020 பொதுத் தேர்தலுக்குத் தேவையான 08 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளல். உலகளாவிய பொருளாதாரத்தில் உருவாகியுள்ள மெதுவான போக்கு காரணமாக பொருளாதாரத்தில் நிலவும் பாதிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பெரும்பாலான நாடுகளுக்கு நடுத்தவணைக்கால உள்நாட்டு தீர்வுகளின்பால் கவனம் செலுத்த நேரிட்டுள்ளது. இதற்கிணங்க, தற்போது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை குறைவடையும் போக்கினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அரசாங்கம் மொத்த நலனையும் பெற்றுக் கொள்வதற்கு கவனம் செலுத்தியுள்ளது உரிய துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பின்வரும் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

* வாகன நெரிசலைக் குறைக்கும் அத்துடன் பொது மக்களினதும் அதேபோன்று தனியார் வாகனங்களினதும் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் தற்போதைய சந்தையில் நிலவும் எரிபொருள் விலையை அவ்வாறே பேணுதல்.

* பெற்றோலிய இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கான இலாப எல்லையினைப் பெற்றுக் கொள்ளகூடிய விதத்தில் இறக்குமதி வரியினை விதித்தல்.

* சருவதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதன் காரணமாக கிடைக்கும் சேமிப்பினைப் பயன்படுத்தி எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியமொன்றைத் தாபித்தல் மற்றும் ஆறு (06) மாத காலத்திற்குள் 200 பில்லியன் ரூபாவை இந்த நிதியத்தின் கீழ் திரட்டுதல்.

* இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தா பனத்திற்கு செலுத்தவேண்டியுள்ள கடன் தொகையினை குறைப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த நிதியத்திலிருந்து 50 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் இதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் செலுத்தவேண்டியுள்ள கடன் தொகையைத் தீர்த்தல்.

* எரிபொருள் விலைக் குறைவின் நலனைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் திண்ம எரிபொருள் லீற்றர் ஒன்றினை 70/- ரூபா வீதம் இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் இதன் மூலம் அனல்மின் பிறப்பாக்கத்திற்கான செலவினை 30 பில்லியன் ரூபாவால் குறைத்து வங்கி கடன் மற்றும் வட்டியினை தீர்த்தல்

அதேபோன்று நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் தற்போது நிலவிவரும் வறட்சி மிக்க காலநிலையினையும் தற்போதைய நிலைமையின் கீழ் நியாயமான விலைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் தேவையினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பருப்பு கிலோ ஒன்றின் உச்ச சில்லறை விலையை 65/- ரூபாவாகவும் 425 கிராம் டின்மீனின் உச்ச விலையை 100/- ரூபாவாகவும் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

COVID - 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, தைத்த ஆடைகள், வர்த்தகம் போன்ற துறைகளின் வர்த்தக நடவடிக்கைகளை நிலையாக பேணுவதற்காக பின்வரும் சலுகைகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

* வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை செலுத்துவதற்கு ஆறு (06) மாத சலுகைக் காலத்தை வழங்குதல்.

* முக்கியமாக தகவல் தொழினுட்பம் மற்றும தைத்த ஆடை துறைசார்பில் நெகிழ்ச்சி மிக்க கடமை நேரங்களை அறிமுகப்படுத்துதல், மேலதி வேலைநேரக் கொடுப்பனவு, விடுமுறைத்தின கொடுப்பனவு என்பன சார்பில் சலுகையினை வழங்குதல்

* 4 சதவீத வட்டி விகிதாசாரத்தின் கீ்ழ் தொழிற்படு மூலதனத் தேவைகளை வழங்குதல்.

அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.