• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தொட்டுணர முடியாத கலாசார மரபுரிமைகளை பேணிப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான நிரந்தர நிறுவனம் சார் கட்டமைப்பொன்றைத் தாபித்தல்
- வருங்கால சந்ததியினருக்கு தொட்டுணர முடியாத கலாசார மரபுரிமைகளை (intangible Cultural Heritage) பேணிப் பாதுகாத்து வைக்கும் நோக்கில் 2003 ஆம் ஆண்டில் "தொட்டுணர முடியாத கலாசார மரபுரிமைகளை பாதுகாத்தல் தொடர்பிலான சர்வதேச சமவாயம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை 2008 ஆம் ஆண்டில் இந்த சமவாயத்திற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. முக்கியமாக சமூக பழக்கவழக்கங்கள், வரலாற்று பொது நிகழ்ச்சிகள், வௌியீடுகள், ஆற்றல்கள், கலாசார அமைவிடங்கள் மற்றும் இதனோடு இணைந்த பொருட்கள் மற்றும் கருவிகள் போன்றவை தொட்டுணர முடியாத கலாசார மரபுரிமைகளாக உள்ளதோடு, மேலைத்தேயமயமாக்கல், பூகோளமயமாக்கல், வர்த்தகமயமாக்கல் மற்றும் மாற்றங்கள் என்பவற்றினால் உருவாகும் சவால்களுக்கு மத்தியில் தொட்டுணர முடியாத கலாசார மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் இதன் பொருட்டு பொருத்தமான அணுகுமுறையொன்றை வகுப்பதற்கும் மேற்போந்த சர்வதேச சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது.
இந்த நோக்கம் கருதி தற்போது இதற்காக குறித்தொதுக்கப்பட்ட நிறுவனமொன்று இல்லாமை மேற்குறிப்பிட்ட சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ளமையினால் கலாசார அமைச்சின் கீழ் தொட்டுணர முடியாத கலாசார மரபுரிமைகள் தொடர்பிலான பணிகளை மேற்கொள்வதற்கு விசேட அலகொன்றை தாபிக்கும் பொருட்டு புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.