• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிபர், ஆசிரியர் சேவைகளிலுள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குதல்
- நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்சார்பாளர்கள் அனைவரினதும் சம்பளம் மற்றும் சேவை நிலைமை தொடர்பிலான பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கை ஆசிரியர் சேவை உட்பட உரிய சகல சேவைகளையும் ஒன்றிணைத்து சேவைப் பிரமாணக் குறிப்பினைத் தயாரித்து பொருத்தமான சம்பள அளவுத் திட்டத்தை தயாரிக்கும் தேவையானது 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் கொள்கைத் தீர்மானமொன்று ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த போதிலும் ஆசிரியர்-அதிபர் சேவைகளில் தற்போது நிலவும் சம்பள முரண்பாடு காரணமாக எழுந்துள்ள நிலைமை பற்றி கல்வி அமைச்சரினால் நீண்ட விடய முன்வைப்பு செய்யப்பட்டது.
அரசாங்கதுறை சம்பளங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து நிலவும் முரண்பாடுகளை நீக்குவதற்கு இயலுமாகும் வகையில் புதிய சம்பளக் கொள்கையொன்றினைத் தயாரிப்பதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அண்மையில் தேசிய சம்பள ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதன்படி இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் சிபாரிசுகள் ஊடாக ஆசிரியர் - அதிபர் சேவைகளில் தற்போது நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.