• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Millennium Challenge Corporation நிறுவனத்தின் Compact உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை
- 2019 திசெம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் Millennium Challenge Corporation நிறுவனத்தின் Compact உடன்படிக்கை சம்பந்தமாக ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை வழங்கும் பொருட்டு பேராசிரியர் (திரு) லலிதசிறி குணருவன் அவர்களின் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழு மாண்புமிகு பிரதம அமைச்சருக்கு இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதோடு, மூலதன வளங்கள் பற்றாக்குறையான மற்றும் கடன் பளுவுக்கு ஆளாகியுள்ள இலங்கையின் அடிப்படை பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முதலீட்டுக்குத் தேவையான நிதி வளம் நாட்டின் வௌிநாட்டு கடன் சுமையினை அதிகரிக்காமல் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் MCC பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் இந்த உடன்படிக்கையின் கீழ் உத்தேச சில கருத்திட்டங்கள் இலங்கையின் தேசிய, சமூக பொருளாதார நலனிற்கு பிரதிகூலமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதென இந்த அறிக்கையின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று உத்தேச இந்த Compact உடன்படிக்கையிலும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையிலும் அதே போன்று தாபிக்கப்படவுள்ள கூட்டுத்தாபனத்தின் அகவிதியிலும் இலங்கையின் அரசியலமைப்புக்கும் நாட்டின் சட்ட முறைமைக்கும் இணங்கியொழுகாத பிரிவுககளும் ஏற்பாடுகளும் அத்துடன் தேசிய நோக்கங்களுக்கும் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பிற நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதென மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆதலால், இத்தகைய பாதகமான அம்சங்களுக்கு பொருத்தமான மாற்றங்களுடன் ஏற்ற திருத்தங்களை மேற்கொள்வது அத்தியாவசியமானதெனவும் அதன் பின்னர் உரிய நிபந்தனைகள் மற்றும் கருத்திட்டப் பிரேரிப்புகள் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் தேவை உட்பட பாராளுமன்ற அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானதெனவும் இந்தக் குழுவினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவை அறிந்து கொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவையினால் இதன் உள்ளடக்கம் ஆரம்ப எண்பிப்புகள் உட்பட சிபாரிசுகள் என்பன கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.